மனவளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பு பற்றிய விழிப்புணர்வு குறைவு
வெள்ளை மனங்கொண்டு இன்று பூத்த மலர்களாய், அத்தனை மகிழ்ச்சியாய் நம் கண்முன் வருவதற்காகவே, குழந்தைகளை கடவுளோடு ஒப்பிடுகிறோம். குழந்தையின் பிறப்பு என்பது, கனவுகளின் பிறப்பு. அதில்தான் எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் உள்ளன! பொக்கிஷமாய் கருவில் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தை, மனநல குறைவோடு பிறந்தால் ஆனந்தங்கள் அழிந்துவிடும். குழந்தையின் வாழ்வும் கொடியதாகி விடுகிறது. பூங்காவில், சாதாரண குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, பூஜா என்ற 3ம் வகுப்பு படிக்கும் மாணவி, தன் வயது கொண்ட சந்தியா என்ற மனவளர்ச்சி குன்றிய தோழியை, பூங்காவிற்கு அழைத்து வருகிறாள். சாதாரண குழந்தைகள் என்ன விளையாடுகின்றனர் என, புரிந்தும் புரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறாள் சந்தியா. பள்ளிப் பாடத்தை சரளமாக படிப்பதற்கும், மற்றவர்களிடம் பேசுவதற்கும், தன் உடையை தானே தேர்வுசெய்து உடுப்பதற்கும் பூஜாவால் முடியும். சந்தியாவால் அது முடியாது. தன்னுடைய தோழி சந்தியா ஏன் இப்படி பிறந்தாள்? இதை சரிசெய்ய முடியாதா? என்ற கேள்வியை தன் அப்பாவிடம் கேட்பதுதான், இந்த கருவின் குரல் ஆவணப்படம். சந்தியாவை போல் உள்ள குழந்தைகளை நாம் பார்த்தால், ஒரு பரிதாப பார்வை வீசிவிட்டு கடந்து சென்று விடுகிறோம். அவர்களை, பேணி காக்கும் பெற்றோர், ஒவ்வொரு நாளும் துயரத்திலும், உற்றார், உறவினர் ஏளன பார்வையிலும் தங்கள் வாழ்க்கையை கடத்தி கொண்டிருக்கின்றனர் என்பது யாருக்கு புரியும்? சராசரி மனிதனுக்கு, நுண்ணறிவுஈவு 90 முதல் 110 வரை இருக்கும். 70க்கும் குறைவாக இருந்தால், அவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள். இதுபோன்ற குழந்தைகள் பிறப்பதற்கான, உளவியல், மரபுரீதியான காரணம் மற்றும் பெற்றோரிடம் விழிப்புணர்வு இன்மை, அலட்சியம், கர்ப்ப காலங்களில் வீடு, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பதற்றமான சூழல், உடல்கூறு போன்ற பல்வேறு அறிவியல் பூர்வமான பல தகவல்கள், மருத்துவர்கள் பேட்டி என இந்த படம், பாடம் கற்பிக்கிறது. பள்ளி கல்லுாரி, மக்கள் கூடும் இடங்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: போலியோ பிறப்பு தடுக்கப்பட்டு விட்டது. கண்தானம் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கிறது. நவீன தொழில்நுட்ப மருத்துவம், பயிற்சி மூலம் காது கேட்கவும், செய்கை மொழியால் பேசவும் முடியும். ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்தால், சரிசெய்ய வாய்ப்பில்லை. மருத்துவ வளர்ச்சி அதிகரித்தாலும், போதுமான விழிப்புணர்வு இன்மையால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு குறையவில்லை. எய்ட்ஸ் தடுப்புக்கு கொடுக்கும் விழிப்புணர்வில், ஒரு சதவீதம் கூட, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பை தடுப்பதற்கு, கொடுக்கப்படுவதில்லை என்பதை நினைக்கும்போது, வருத்தம்தான் ஏற்படுகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.