இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க தீர்மானம்
கோவை: சுயநிதி பள்ளிகளில், அரசால் ஒதுக்கப்பட்ட 25 சதவீத இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் கோவையில் நடந்தது. இதில், மத்திய கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத மாணவர்கள் இலவச கல்வி பயில, மூன்று ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கை விரைவில் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இழுத்தடிப்பதால், 2015-16ம் கல்வியாண்டில், இலவச கல்வி திட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்படும். கோவையில் ஒருசில தாசில்தார்கள் மாதக் கணக்கில், நிலைச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பதையும் அவமானப்படுத்துவதையும் கண்டிக்கிறோம். இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.