குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.,களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி
வால்பாறை: பழங்குடியின மக்களுக்காக போராடி நில உரிமை பெற்றுத் தந்த ராஜலட்சுமி தம்பதியினர் புதுடில்லியில் நடக்கும் குடியரசுதின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கின்றனர்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கணவர் ஜெயபால். ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நிலஉரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.தன் கிராமத்தை இந்தியாவின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். இவரது செயலுக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றியவர் அவரது கணவர் ஜெயபால். இவர்களின் செயலை பாராட்டும் விதமாக இருவரும் இந்த ஆண்டு புதுடில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடக்கும் குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக கலந்து கொள்கின்றனர்.தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இவர்கள் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன்பின் ஜனாதிபதி வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர்.