சீல் வைக்கப்படாத பெட்டியில் ஓட்டு போட ஆசிரியர்கள் மறுப்பு
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி, ஆம்பூர் ஹிந்து மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.பயிற்சியை திருப்பத்துார் கலெக்டர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார். பயிற்சிக்கு பின், தொகுதி வாரியாக வைத்திருந்த ஓட்டு பெட்டியில், தங்கள் தபால் ஓட்டுக்களை அரசு ஊழியர்கள் செலுத்தினர்.இதில், திருவண்ணாமலை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்துார் சட்டசபை தொகுதிக்கென வைத்திருந்த ஓட்டுப்பெட்டி பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படாமல் இருந்தது. வீடுகளில் பம்பு செட் வைக்கும் தகர பெட்டியை, ஓட்டுப்பெட்டியாக்கி மாற்றி வைத்திருந்தனர்.அதைப்பார்த்த சில அரசு ஊழியர்கள், சீலிடாத பெட்டியில், எப்படி தபால் ஓட்டை செலுத்த முடியும் என, கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்பு அரசு ஊழியர்கள், 'பெட்டி எப்படி இருந்தால் என்ன?' என கேட்டதால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின், ஓட்டு பெட்டியை மாற்றி, வேறு பெட்டி வைத்து பூட்டு போட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு, தபால் ஓட்டுகள் செலுத்தும் பணி துவங்கியது.