கழிப்பிடம் சுத்தம் செய்த விவகாரம் தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்
திருப்பூர்: தாராபுரம் அருகே, பள்ளி கழிப்பிடத்தை மாணவியர் சுத்தம் செய்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர் உட்பட இருவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவியர் இருவரை, கழிப்பிடம் சுத்தம் செய்து விட்டு, வகுப்பறைக்கு வரும்படி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஒருவர் கூறியதாக, புகார் எழுந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், தாசில்தார் கோவிந்தசாமி, சி.இ.ஓ., கீதா மற்றும் அதிகாரிகள் குழுவினர், பள்ளியில் விசாரணை நடத்தினர். தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி, ஆசிரியை சித்ரா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.புகார் வந்தது எப்படிமாணவியர் இருவரும் தங்கள் பகுதியில் உள்ள படிப்பகம் ஒன்றில் காலை, மாலை நேரம் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் தாமதமாக வருவது குறித்து படிப்பகத்தில் உள்ள ஆசிரியை கேட்டுள்ளார்.மாணவியர், பள்ளி கழிப்பிடத்தை தினசரி சுத்தம் செய்து விட்டு வருவதால், தாமதம் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இதுதொடர்பாக, 1098க்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, விசாரித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.