கல்வித்துறைக்கு இடமாறுதல் கொள்கை தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி : தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், தற்காலிகமாக காரைக்காலுக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை புதுச்சேரிக்கு மீண்டும் இடமாற்றம் செய்ய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பாட்சா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தீபாக் உச்சம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜ்குமார், 2023-24ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.இதில், வரும் ஜூனில் அயோத்தியில் நடக்கும் ஏ.பி.ஆர்.எஸ்.எம். செயற்குழு கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.புதுச்சேரி கல்வித்துறைக்கென தனியாக இட மாறுதல் கொள்கையை உருவாக்குவது சம்பந்தமாகவும், தற்காலிகமாக காரைக்காலுக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை வரும் ஜூன் மாதத்தில் புதுச்சேரிக்கு இட மாறுதல் செய்யவும், கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், இயக்குனர் ஆகியோரை சந்தித்து, கோரிக்கை வைக்க முடிவு எடுக்கப்பட்டது.சங்கத்தில், அனைவரும் தவறாமல் மாத சந்தா செலுத்த வலியுறுத்தப்பட்டது. மேலும்,2023-24ம் ஆண்டிற்கான சங்க ஆண்டு மலர் வெளியிடவும், உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.ஆசிரியை தேவி நன்றி கூறினார்.