தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க நிபுணர் குழு நியமனம்
சென்னை: சோழர் கால வரலாற்றை தெரிவிக்கும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணை:தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அருங்காட்சியகங்கள் துறை குறித்து, நிதித் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.அதில், உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்ற வும், அக்கால கலைப் பொருட்கள், நினைவு சின்னங்களை பாதுகாக்கவும், தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என்று கூறப்பட்டது.இதையொட்டி, விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்க, 1 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து, இந்தாண்டு பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்கு, சிறப்பு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என, அருங்காட்சியகங்களின் கமிஷனரும் கேட்டுக் கொண்டுள்ளார்.ஒடிசா மாநில முதல்வரின் ஆலோசகர், ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஆர்.பாலகிருஷ்ணன், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம், தொல்லியல் துறை இணை இயக்குனர் இரா.சிவானந்தம், தமிழ் மெய்நிகர் பல்கலையை சேர்ந்த ஆய்வாளர் காந்திராஜன், பத்திரிகையாளர் மற்றும் ஆய்வாளர் சமஸ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் உதவிப் பொறியாளர் டி.பிரபாகரன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தினமலர் நாளிதழ் குழுமத்தை சேர்ந்த தாமரை பதிப்பகம் சார்பில், 'சோழர்கள் இன்று' என்ற பெயரில், சோழர் கால வரலாற்று புத்தகம், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு, வாசகர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களி டம் வரவேற்பை பெற்றது.அதில், சோழர்களின் பாரம்பரியம், ஆட்சி முறை, வாழ்வியல் குறித்த விரிவான தகவல்கள் இடம் பெற்றன. சோழர் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டு இருந்தது.