உள்ளூர் செய்திகள்

டி.ஜி.எச்.எஸ்., அறிவிப்புக்கு பின் எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப பதிவு

சென்னை: மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகமான டி.ஜி.எஸ்.எஸ்., அறிவிப்புக்கு பின், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப பதிவு துவங்கும் என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் வாயிலாக சேர்க்கை நடத்தப்படுகிறது.வழக்கமாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில், அகில இந்திய கலந்தாய்வு, மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது துவங்கும். இந்தாண்டு கடந்த 4ம் தேதி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. ஆனாலும், இன்னும் விண்ணப்பிப்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கல், அடுத்தடுத்த ஆறு பேர் முழு மதிப்பெண் பெற்றது உள்ளிட்ட சர்ச்சைகளால், போராட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, ஒரு வாரமான நிலையில், விண்ணப்ப பதிவு எப்போது துவங்கும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கலந்தாய்வு கூட்டம்இந்நிலையில், சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில், தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தேர்வுக்குழு செயலர் அருணலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து அருணலதா கூறுகையில், மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகமான, டி.ஜி.எச்.எஸ்., அறிவித்த பின், முதலில் அகில இந்திய கலந்தாய்வுக்கும், பின், மாநில அரசின் கலந்தாய்வுக்கும் விண்ணப்ப பதிவு துவங்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்