உள்ளூர் செய்திகள்

கொத்தடிமைகளாய் நடத்தப்படும் அவலம்; கவுரவ விரிவுரையாளர்கள் குற்றச்சாட்டு

அரசு கலைக்கல்லுாரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை கொத்தடிமை போல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள், 164ல், 7,300க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வரை, கவுரவ விரிவுரையாளர்களை, அந்தந்த கல்லுாரி நிர்வாகம் நியமித்துக்கொள்ளவும், அவர்களுக்கு, 20,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும், கல்லுாரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.ஆண்டுக்கு, 11 மாதங்கள் மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்பட்டாலும், பணி அனுபவம் பயனாக இருக்கும் என்பதற்கு, கவுரவ விரிவுரையாளராக பணியில் சேர போட்டிகள் உள்ளன. அதற்குரிய தகுதிகள் கொண்டவர்களையே, கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கின்றனர். ஆனாலும் கல்லுாரிகளில், கொத்தடிமை போல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் சிலர் கூறியதாவது:அரசு கலை கல்லுாரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை, அங்குள்ள பேராசிரியர்களும், முதல்வரும் கொத்தடிமை போல் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்துகின்றனர். பல கல்லுாரிகளில் இரு சுழற்சிகளில் பாடம் நடத்த கட்டாயப்படுத்தப்படுகின்றனர். துறைத்தலைவர் பணிகளையும், எங்கள் தலையில் சுமத்துகின்றனர். மறுப்பு தெரிவிக்கும் கவுரவ விரிவுரையாளர்களை, வேண்டுமென்றே அறையின் வெளியே பல மணி நேரம் காத்திருக்க வைப்பது, பல்வேறு காரணங்களை காட்டி திட்டித்தீர்ப்பது என பழி தீர்க்கின்றனர்.இதுபோன்று நடந்ததற்கு, கவுரவ விரிவுரையாளர்களை அவமானமாக நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, 2009ல் கல்லுாரி கல்வி இயக்குனர் எச்சரித்திருந்தார். ஆனாலும் இன்று வரை அவலம் தொடர்கிறது. குறைந்த சம்பளத்தில் விதிமீறி இரு மடங்கு பணி, கீழ்த்தரமாக நடத்துதல் உள்ளிட்டவற்றால் கவுரவ விரிவுரையாளர்கள் விரக்தியில் உள்ளனர். கல்லுாரி கல்வி இயக்குனரகம், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்