புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா
விழுப்புரம்: முகையூர் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், வர்சுஷா நிறுவனம் சார்பில், 16 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணி துவக்க விழா நடைபெற்றது.அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், வர்சுஷா நிறுவனம் சார்பில், 16 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில், அமைச்சர் பேசும் போது, பள்ளிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி, சமூகத்தில் உள்ள நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் நிதியுதவியோடு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கல்வி படிப்போடு, விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், முகையூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பிரபு, ஒன்றிய செயலாளர் பிரேமா அல்போன்ஸ், மாவட்ட துணை செயலாளர் முருகன், திருக்கோவிலுார் பேரூராட்சி துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா, நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், கவுன்சிலர் பூபதி, அரகண்டநல்லுார் பேரூராட்சி தலைவர் அன்பு உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.