பெங்களூரு பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பெங்களூரு: பெங்களூரில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; பி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி; எம்.எஸ்.ராமையா தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.தகவலறிந்து வந்த போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு படையினரும் மூன்று கல்லுாரிகளிலும் சோதனை நடத்தினர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக, வி.வி.புரம் மற்றும் ஹனுமந்த நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இரு மின்னஞ்சல்களும், மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் சலிபுரி டவுனில் இருந்து வந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, பெங்களூரு போலீஸ் படையினர், மேற்கு வங்கத்திற்கு சென்று தீபன்ஞன் மித்ரா, 48, என்பவரை கைது செய்தனர்.இவரிடம் இருந்து மடிக்கணினி, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர், ஏற்கனவே பெங்களூரில் உள்ள பல பள்ளி, கல்லுாரிகளுக்கும் இதுபோன்று மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.பி.காம்., முடித்த இவர், 2012 வரை பல நிறுவனங்களில் பணியாற்றி, வேலையில் இருந்து விலகினார். அத்துடன், கம்ப்யூட்டர் தொடர்பான பல்வேறு படிப்புகளையும் முடித்துள்ளார். 2012க்கு பின், பணி எதுவும் கிடைக்காததால், மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார். இதன் விளைவாகவே, மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பியதாக போலீசார்தெரிவித்தனர்.