உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள்; நரிக்குறவ மக்கள் வேதனை

பல்லடம்: பல்லடத்தை அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகரில், நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு, 140 குடும்பங்கள் வசிக்கின்றன. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வரும் இவர்களின் குடும்பங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.நரிக்குறவர் குடும்பத்தினர் கூறியதாவது:கடந்த, 25 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இன்றுவரை எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் குடிநீர், சுகாதாரமின்றி புழு பூச்சிகளுடன் வினியோகிக்கப்படுகிறது. குடியிருப்புகள் சேதமடைந்து, மழைநீருடன் விஷ ஜந்துக்களும் உள்ளே வருகின்றன.நிறைந்து கிடக்கும் சாக்கடை கால்வாய், குவிந்து கிடக்கும் குப்பைகள் என, எந்த வித அடிப்படை வசதிகளும் இங்கு கிடையாது. கொசுப்புழுக்கள் அதிகரித்து, குழந்தைகள் பலர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 25 ஆண்டுகளாக இங்குள்ள எந்த குடியிருப்புகளுக்குமே கழிப்பிடம் கிடையாது.எங்களுக்கு யாரும் வேலை தராததால், ஊசி - பாசி விற்பதுதான் வாழ்வாதாரமாக உள்ளது. இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், குழந்தைகளை எவ்வாறு படிக்க வைப்பது? இதுகுறித்து, கலெக்டர்கள், தாசில்தார், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட அனைவரிடமும் தெரிவித்துள்ளோம். இதுவரை எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் அடிப்படை வசதி கிடைக்கவில்லை; ஆனால், ஓட்டு போடும் உரிமை மட்டும் கிடைத்துள்ளது. ஓட்டுக்காக வரும் அரசியல்வாதிகள் எங்களின் பிரச்னைகளை தீர்க்க வரவில்லை. நரிக்குறவர் இனம் என்றால், எங்கள் வாரிசுகளும் இப்படியேதான் வாழ வேண்டுமா? இவ்வாறு அவர்கள் கூறினர்.ஓட்டுக்காக வரும் அரசியல்வாதிகள்எங்களின் பிரச்னைகளை தீர்க்க வரவில்லை. நரிக்குறவர் இனம் என்றால், எங்கள் வாரிசுகளும் இப்படியேதான் வாழ வேண்டுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்