உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை: மகேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன், எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், அண்ணாதுரை, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு சென்ற அமைச்சர் மகேஷ் ஆசிரியர்களிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார்.தொடர்ந்து அமைச்சர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த நாள் வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. ஆசிரியையின் சொந்த பிரச்னையாக இருந்தாலும், அந்த இளைஞர் பள்ளிக்குள் வந்து இது போன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் ஒரு வேண்டுக்கோள் வைக்கிறேன்... இதுபோல, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்பவர்களுக்காக, வக்கீல்கள் யாரும் வாதாட வராதீர்கள். இவர்களை போன்றவர்கள் கண்டிப்பாக தண்டனைக்குரியவர்கள். இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை, ஒட்டுமொத்தமாக எல்லாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், நீதிபதிகள் தண்டனை வழங்க வேண்டும்.மீண்டும் பள்ளிக்கு வரும் போது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அச்ச உணர்வு இருக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது.பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கூறியதின் அடிப்படையில், கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு இழப்பீடு தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்