உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் பாலியல் தொந்தரவு; புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

பெ.நா.பாளையம்: பள்ளிகளில் பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்கலாம் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவர்கள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தவும், அறவே பாலியல் தொந்தரவுகளை ஒழிக்கவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு என்ற பெட்டியில் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு குறைகளை தாராளமாக தெரிவிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் முன் வந்து தெரிவிக்கலாம் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளார்களா? தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு தேவைகளுக்கு, 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், உதவிகளை கோரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும், விழிப்புணர்வு செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்