உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.இ.இ.இ. மறு தேர்வு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

அனைத்திந்திய இஞ்சினியரிங் நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்துவிட்டு சி.பி.எஸ்.இ. மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து தேர்வு நேரம் மாற்றி வைக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் போன சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, சி.கே. பிரசாத் ஆகியோர், மறுதேர்வு கோரிக்கையை நிராகரித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் மாணாக்கர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இத்தேர்வினை மறுபடியும் நடத்த வேண்டும் என்றால், இவ்வளவு மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படும். எனவே நடந்து முடிந்த நுழைவுத் தேர்வை முழுமையாக எடுத்துக் கொண்டு, மறு தேர்வு நடத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர். மே 1ம் தேதி 97% மாணாக்கர்கள் நுழைவுத் தேர்வினை எழுதியுள்ளனர். தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு மே 11ம் தேதி மறு தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வெழுதிவிட்ட நிலையில், அவர்களை மீண்டும் சிரமப்படுத்துவது தவறாகும் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றம், இரண்டாவதாக நடைபெறும் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் மேல் முறையீடு செய்தனர். தற்போது உச்ச நீதிமன்றமும், இவர்களது கோரிக்கையை நிராகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்