ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு மாணவர்களின் கல்வி பாதிப்பு
பேறுகால விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பேறுகால விடுப்பு மூன்று மாதம் என்பதை தமிழக அரசு ஆறு மாதமாக உயர்த்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் பிரச்னையில்லை. மாற்று நபர் பணி செய்ய முடியும். ஆசிரியைகள் விடுப்பில் செல்லும் போது மாணவர்களுக்கு பாடம் தடையின்றி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நடத்தி வந்த பாடங்களை மாற்று பாட ஆசிரியர் மூலம் நடத்துவது சிரமம். குறிப்பாக பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற சிறப்பு பாடங்களை அப்பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களால் மட்டுமே முழுமையாக நடத்த முடியும். விடுப்பில் செல்லும் ஆசிரியை 6 மாதம் கழித்து பணிக்கு வந்தாலும் முழுமையாக பாடம் நடத்தவும் முடியாது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆசிரியைகள் பேறுகால விடுப்பு எடுக்கும் போது, அதே பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் அல்லது தற்காலிகமாக வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காது. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.