கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: அரசு கடும் எச்சரிக்கை
தமிழகத்தில், தற்போது நடந்துவரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, இந்திய கம்யூ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. இதுகுறித்து பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், 'தமிழகத்தில் 31 புதிய கல்லூரிகள் உட்பட 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து விசாரித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜெயபாலன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில், இதுவரை, அதிக கட்டணம் வசூலிப்பதாக, 50க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 17 புகார்களின் மீது விசாரணை நடைபெற்று, 3 கல்லூரிகள், மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்திவிட்டன' என்று தெரிவித்தார். மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயன், 'சுயநிதி மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை, ஆண்டுக்கட்டணமாக ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.