சேரிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஐ.ஐ.ஐ.டி. மாணவர்கள்
லக்னோ: ஆமதாபாத் ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் தங்களின் சமூகப் பொறுப்புணர்வை நன்கு புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பிக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுள்ளனர். காலையில் மாணவர்களாகவும், மாலை நேரத்தில் பள்ளி செல்லா ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகவும் இருந்து, தேசத்துக்கான கடமையைச் செவ்வனே செய்கின்றனர். ஆமதாபாத் ஐ.ஐ.ஐ.டி.,யில் மூன்றாமாண்டு பயிலும் பத்து மாணவர்கள் மாலை நேரங்களில் தங்கள் கல்வி நிறுவனத்தின் அருகாமைப் பகுதிகளில் உள்ள சேரி, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த உன்னதப்பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒருவரான ராகுல்குமார் கூறியதாவது: பிரபலமான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மீது, பொதுமக்கள் அதிகபட்ச எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். நாங்கள் எந்த நிறுவனத்தில் பணி செய்வோம் என்பது தெரியவில்லை. ஆனால், இப்போதே மகிழ்ச்சியாக இருக்கிறோம்; மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழத்துவங்கி இருக்கிறோம். எங்களின் சமூகப் பொறுப்புணர்வை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த பெரும் பின்புலமோ, நிதி ஆதாரமோ தேவையில்லை. உறுதியான மனநிலையும், செய்து முடிக்க வேண்டும் என்ற முயற்சியும், சமூகத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் இயன்றளவு பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற அக்கறையும் இருந்தால் போதும். அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் மாலையில் மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் வரை பாடம் நடத்துகிறோம். அவ்வளாகத்தை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அந்நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். அகமதாபாத் ஐ.ஐ.ஐ.டி., வளாகத்தின் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளாகவே, இம்மாலை நேர வகுப்பு நடந்து வருகிறது. ஆறு முதல் 14 வயதுள்ள மாணவர்களுக்கு இந்தி, ஆங்கில மொழிப்பாடம், கணித கணக்கீடுகள் பாடத்திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் மாணவர்கள் சிலரும் இத்திட்டத்தில் கைகோர்த்துள்ளனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், பயிற்சி ஏடுகள் உள்ளிட்ட எவற்றுக்கும் ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை. சக மாணவரான அபினவ்குப்தா கூறுகையில், &'குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பயிற்றுவித்தலில் ஈடுபட்டிருந்தாலும், சக ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் இதற்காக நிதியுதவி செய்கின்றனர். எங்களின் மூத்த மாணவர்களில் சிலர், படிப்பை நிறைவு செய்து பணிக்குச் சென்று கொண்டிருக்கும் போதும், சேரிக் குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகின்றனர். அவர்களால் ஈர்க்கப்பட்டு நாங்களும் இதைச் செய்து வருகிறோம்&' என்றார். ஐ.ஐ.ஐ.டி., மாணவர்களின் இச்செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், &'அவர்களின் செயல் மிக உன்னதமானது. இருக்கும் வளத்தைக் கொண்டு நாட்டுக்கு எப்படி சேவை செய்யலாம் என்பதை எங்களுக்கு அவர்கள் கற்பித்து விட்டனர்&' என்றார். உணவு விடுதி உரிமையாளர் பிரேம்குமார் பனர்வால் கூறுகையில், &'இவர்களைப் போன்றே ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால், விரைவிலேயே நாம் வல்லரசாகி விடுவோம்&' என்றார். இளைய தலைமுறை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் மிகச்சிறந்த உதாரணம்.