உள்ளூர் செய்திகள்

புதிய தேர்வு விதிமுறையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு

சென்னை: எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வில் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளிக்கும்படி, எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டில் உள்ள பாடங்களான பயோ கெமிஸ்ட்ரி, அனாடமி, பிசியாலஜி ஆகியவை தலா இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இந்த இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என இருந்தது. இந்த நடைமுறையில் தற்போது, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் என எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்தது. கடந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்தப் புதிய முறையை பல்கலைக்கழகம் கொண்டு வந்தது. கடந்த ஆகஸ்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை. இந்தப் புதிய விதிமுறையை எதிர்த்து, ஐகோர்ட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு முரணாக, இந்தப் புதிய விதிமுறை உள்ளது என்றும், இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இம்மனுக்கள் நீதிபதி அரி பரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி அரி பரந்தாமன் உத்தரவிட்டார். விசாரணையை 14ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்