உள்ளூர் செய்திகள்

‘பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வு செய்ய தனி கமிஷன்’

சென்னை: பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களைத் தேர்வுசெய்ய தனி கமிஷன் உருவாக்குவது குறித்து தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம், உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் செப்., 23ம் தேதி சென்னையில் நடந்தது. உயர்க்கல்வித் துறைச் செயலர் கணேசன், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் ஜெயக்கொடி, தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி, உறுப்பினர் செயலர் கண்ணன் மற்றும் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: தமிழக பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை மற்றும் பயன்கள்; தரமான கல்வியை வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்; கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் குறித்தும், இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களைத் தேர்வு செய்வதில், பல்கலைக்கழகங்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இக்குறைகளை நீக்க, பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர் மற்றும் அலுவலர்களைத் தேர்வு செய்ய தனி அமைப்பை(கமிஷன்) உருவாக்குவது குறித்தும், இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கான ஆசிரியர், அலுவலர் தேர்வையும் இந்த அமைப்பு மூலம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட்டம் மீண்டும் அடுத்த மாதம் 18ம் தேதி மாலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். அக்கூட்டத்தில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தணிக்கையை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். அடுத்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் விருப்பப்பாடக் கல்வித்திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், அவற்றை நீக்குவது குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பதிவாளர்கள் வெளியேற்றம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஜப்பானுக்கும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பழனிச்சாமி அமெரிக்காவிற்கும் சென்றுள்ளனர். அவர்கள் சார்பாக துணைவேந்தர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள, அப்பல்கலைக்கழக பதிவாளர்கள் வந்திருந்தனர். கூட்டம் துவங்கும் முன், துணைவேந்தர்கள் தவிர மற்றவர்கள் அறையை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது. துணைவேந்தர்கள் சார்பாக, பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் வந்திருந்தால் அவர்களும் வெளியேறவும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளர்கள் அறையை விட்டு வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்