உள்ளூர் செய்திகள்

துபாயிலும் பொருளாதார நெருக்கடி: அதிகரிக்கும் வேலையிழப்பு பயம்

துபாய்: சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்து வந்த வளைகுடா நாடான துபாயிலும், இப்போது பொருளாதார சிக்கல் தலைதூக்க துவங்கியுள்ளது. பிரபல கட்டுமான நிறுவனம் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சர்வதேச நாடுகளை எல்லாம் பதம் பார்த்தது. இருப்பினும் இதிலிருந்து அரபு நாடுகள் மட்டும் தாக்குபிடித்து நின்றன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்போது துபாய் போன்ற வளைகுடா நாடுகளிலும் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தலை தூக்க துவங்கியுள்ளது. துபாய் பங்குச் சந்தையில் நவ. 11ம் தேதி 7 சதவீத அளவிற்கு சரிவு ஏற்பட்டது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மிகவும் ஆட்டம் கண்டன. இந்தியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உள்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக  துபாய் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. பல  நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான தமாக்  200க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 14 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளது. சவுதி அரேபிய பங்குச் சந்தையில் 5.2 சதவீதமும், குவைத் பங்குச் சந்தையில் 2.6 சதவீதமும், கத்தார், மற்றும் பக்ரைன் பங்குச் சந்தைகளில் முறையே 6.25 சதவீதம் மற்றும் 2.74 சதவீதமும் சரிவு ஏற்பட்டது. தற்போது, வங்கிகள் கடன் கொடுப்பதில் கெடுபிடி காட்டத் துவங்கியுள்ளன. துபாயில் அரசுக்கு சொந்தமான கம்பெனிகளை கடன் பிரச்னையால் மூழ்காமல் இருக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்போம் என, அபுதாபி  வர்த்தக வங்கி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்