உள்ளூர் செய்திகள்

திறமையான விஞ்ஞானிகள் குறைவு: முன்னாள் துணைவேந்தர் வருத்தம்

கோபிசெட்டிபாளையம்: "இந்தியாவில் திறமையான விஞ்ஞானிகள் குறைவாக உள்ளதென," வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடந்த இன்ஸ்பியர் அறிவியல் முகாமில் பங்கேற்ற அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார். கோபி ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் கல்லூரியில், டில்லி இன்ஸ்பியர் டிப்பார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி சார்பில் இன்ஸ்பியர் சயின்ஸ் முகாம் நடந்தது. கோபி தாலுகாவை சேர்ந்த பல்வேறு பள்ளியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அறிவியல் முகாமில் பங்கேற்று, அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டனர். அறிவியல் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது: "பொருளாதாரத்தில் வலுவானதாக உள்ள இந்தியா, சமுதாய முன்னேற்றத்தில் வலுவில்லாமல் உள்ளது. விஞ்ஞானிகளே நாட்டின் முதுகெலும்பு. அவர்களால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம், சமுதாய முன்னேற்றத்துக்கும் அதிகளவில் பங்காற்ற முடியும். இந்தியாவில் திறமையான விஞ்ஞானிகள் குறைவாக உள்ளனர். இன்றைய இந்தியா, 20க்கும் மேற்பட்ட சமுதாய பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கிறது. 10 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி படிக்கின்றனர். நாம், புதுமை படைப்பதிலும், காப்புரிமை வாங்குவதிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். வறுமையையும், ஊழலையும் ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும். நம் நாட்டில் படித்தவர்களை காட்டிலும், படிக்காதவர்களை மகிழ்ச்சியாக உள்ளனர். ஒரு நாடு அறிவியலில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும்," என்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்