உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக்காட்டுவோம்: மழை பாதிப்பு இருந்தபோதும் குவிந்த மாணவர்கள்

சென்னை: ‘தினமலர்’ சார்பில், பத்தாம் வகுப்பு மெட்ரிக் மாணவர்களுக்கான ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர். தினமலர் சார்பில், ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்காக ‘ஜெயித்துக் காட்டுவோம்’ ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு ஏற்கனவே, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கும், நடத்தப்பட்டது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் தனியாக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது. பத்தாம் வகுப்பு மெட்ரிக் மாணவர்களுக்கான ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி,  சென்னை கலைவாணர் அரங்கில் பிரத்யேகமாக நவ. 30ம் தேதி நடத்தப்பட்டது. காலை பத்தாம் வகுப்பு மெட்ரிக் மாணவிகளுக்கும், பிற்பகலில் மாணவர்களுக்கும் என பிரித்து நடத்தப்பட்டது. காலை நிகழ்ச்சிக்கு மழை வெள்ளம் வடியாத நிலையிலும் அதிகாலை 5 மணி முதலே மாணவிகள் வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதில் காலை 9 மணி வரை வந்த மாணவிகள் அனைவரும் அரங்கத்திற்குள் அமர வைக்கப்பட்டனர். இது தவிர அரங்கத்திற்கு வெளியே திரைகள் மற்றும் ‘டிவி’க்கள் மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பப் ட்டது. பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிக்கு வந்திருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டனர். இவர்களில் பெண்கள் பெரும்பான்மையினர் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் கடந்தாண்டு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்ற காட்சிகள் திரையிடப்பட்டன. பின், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஆசிரியர் கள் சுந்தரராமன் (தமிழ்) லலிதா சுப்ரமணியம் (ஆங்கிலம்) சாரதா சுப்ரமணியம் ( கணிதம் 1,2) மெலின் செல்வகுமார் (அறிவியல் 1) சாந்தி பிரபுராம் (அறிவியல் 2) ரஜினி பால் (வரலாறு) சுரேஷ் குமார் (புவியியல்) ஆகியோர் தேர்வில் நேர மேலாண்மை, எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெறலாம். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நூற்றுக்கு நூறு பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர். பாடங்கள் தொடர்பான விளக்கங்கள், வினாக்கள் கேட்கப்படுவது எப்படி, மதிப்பெண்கள் அளிக்கப்படும் விதம், விடையளிப்பது எப்படி என்பது குறித்த விளக்கம் மேடையில் வைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது. இவற்றில் இருந்து தேவையான குறிப்புகளை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். காலையில் மாணவிகளுக்காக நடத்தப்பட்ட நிலையில்,  பிற்பகல் நிகழ்ச்சிக்காக காலை 10 மணி முதலே மாணவர்கள் நிகழ்ச்சி நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வரத் துவங்கினர். நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் ‘ தேர்விற்கான முக்கிய கேள்விகள் மற்றும் ‘புளூ பிரின்ட்’ அடங்கிய புத்தகம், இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் வழிகாட்டுதல் புத்தகம், தேர்வு எழுதும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விவரங்கள் அடங்கிய ‘உடம்பும் மனசும் நல்லா இருக்கணும்’   என்ற புத்தகம், குறிப்பெடுப்பதற்கான ஏடு , பேனா மற்றும் பைல் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, ‘டிவி’ புகழ் ரமேஷ் பிரபா மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் ஆகியோர், பெற்றோரின் கடமை, தன்னம்பிக்கை மற்றும் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து சிறப்பு ஆலோசனைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்