கால்நடை கல்விக்கு அங்கீகாரம் கிடைக்குமா... கலந்தாய்வு நடக்குமா?
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, உணவு தொழில்நுட்ப கல்லூரி, தூத்துக்குடி மீன்வள கல்லூரி, ஓசூர் கோழியின தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை உள்ளன. இக்கல்லூரிகளில் மொத்தமுள்ள, 280 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட, ஒரத்தநாடு மற்றும் நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், 80 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற, இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலிடம், பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் குழு, ஆய்வு நடத்தி முடிந்துள்ள நிலையில், இதுவரை, இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், இக்கல்லூரிகளில் உள்ள, 80 இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என, பல மாதங்களாக, கால்நடை பல்கலைக்கழகம் கூறி வந்தாலும், இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை. இக்கல்லூரிகளில் சேர, மொத்தமுள்ள, 80 இடங்களுக்கு, 120 பேர் விண்ணப்பித்து, சேர்க்கைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கி, தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், கால்நடை மருத்துவ கல்லூரியில், கலந்தாய்வு நடத்துவதில் தொடர் இழுபறி நிலவி வருவதால், மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் கூறியதாவது: ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில், நிர்வாக ரீதியிலான தாமதம் மட்டுமே ஏற்பட்டு வருகிறது. ஓரிரு நாளில், இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாத இறுதியில் துவங்கும். இவ்வாறு, பிரபாகரன் கூறினார்.