சர்வதேச பொருளாதார நிதி நெருக்கடி கல்லூரி பாடமாகிறது!
நியூயார்க்: பல லட்சம் கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் அமெரிக்க நிறுவனங்கள் சிக்கித்தவித்த விவகாரம், இப்போது கல்லூரி மாணவர்களுக்கான பாடமாக மாறியுள்ளது. பிரபல வங்கி லேமென் பிரதர்ஸ் உட்பட சில முன் னணி அமெரிக்க நிறுவனங்கள் திடீர் நிதி நெருக்கடியால் தவித்தன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடு செய்ய அமெரிக்க அரசு கைகொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில், இந்த நிதி நெருக்கடி விவகாரத்தை தொகுத்து கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்க சில பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள பிரபலமான வார்ட்டோம் மேலாண்மை பயிற்சி மையத்தில், நிதி நெருக்கடி விவகாரம் பற்றிய புதிய பாட திட்டம் சேர்க்கப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த பாடத்தை மையமாக எடுத்து, அதில் ஆராய்ச்சி செய்யவும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுபோல, ஐவி பல்கலைக்கழகத்திலும் மேலாண்மை மாணவர்களுக்கு, நிதி நெருக்கடி விவகாரத்தை தனி பாடமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக, நிதி நிறுவனங்கள் திடீரென திவால் ஆகும் ஆபத்து, அதற்கான காரணங்கள், அதை தீர்க்க வழிகள் போன்றவற்றை உள்ளடக்கி பாடம் வைக்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க பேராசிரியர் மோரோ கில்லனுக்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. அவர் கூறுகையில்,‘சர்வதேச நிதி நெருக்கடி வரலாற்று சம்பவம் என்று கூற வேண்டும். இதுவரை இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டதே இல்லை. அதனால், இதை எதிர்காலத் தில் தவிர்க்கும் பொருட்டு, ஆராய்ச்சி செய்வது முக்கியம். அதனால் தான் இந்த பாடதிட்டத்தை கொண்டு வர உள்ளோம்’ என்று தெரிவித்தார்.