உள்ளூர் செய்திகள்

இந்திய ராக்கெட்டுகளுக்கு ‘மவுசு’ சந்திரயான் விஞ்ஞானி பெருமிதம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில், சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் 32வது புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. ஜன. 17ம் தேதி மாலை நடந்த விழாவில், சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை பேசியதாவது:உலகில் அதிக மொழிகளில், பெண்களை போல, நிலவும் பாடப்பட்டுள்ளது. அதனால் தானோ என்னவோ, நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியவன் என்ற வகையில், என் மீது அனைவரும் பெரிதும் அன்பு செலுத்துகின்றனர். நல்லவர்களாகவும், வல்லவர்களாவும் இளைஞர்கள் உருவாக வேண்டும். சாதி, மதமற்ற, நாளைய விஞ்ஞான இந்தியாவை உருவாக்க உழைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாதுரை பேசினார். பின், பள்ளி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்: கேள்வி: ஏற்கனவே நிலவிற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களுக்கும், இந்தியா அனுப்பியதற்கும் என்ன வேறுபாடு?பதில்: கடந்த 60-70 ஆண்டுகளில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இருந்து நிலவிற்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டன, சாதிக்க அல்ல. அறிவியல் போட்டியால் தான். அவர்கள் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே ஆராய்ந்ததாக சொல்கின்றனர். நாங்கள் முழு நிலவையும் படிப்படியாக ஆராய உள்ளோம். சந்திரயான் -2ல் இயந்திர மனிதனை அனுப்புவதாக சொல்கிறீர்கள். மனிதனை அனுப்பினால் என்ன பாதிப்பு ஏற்படும்?நிலவை சுற்றி கதிரியக்கம் காணப்படுகிறது. அதனால் தான் இயந்திர மனிதனை முதலில் அனுப்புகிறோம். மனிதனை அனுப்பினால் செலவு மிக அதிகம். மனிதன் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.  2018ல் நிலவிற்கு மனிதனை அனுப்புவோம். வேறு எந்த கிரகத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது?விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. புத்தகக் கண்காட்சி போல, விண்வெளி குறித்த கண்காட்சி வைக்கப்படுமா?இந்தியாவில் நான்கு இடங்களில், நான்கு கண்காட்சி வாகனங்கள் கண்காட்சி நடத்த தயாராக உள்ளன. நீங்கள் அழைத்தால், உங்களது பள்ளிக்கே வந்து கண்காட்சி நடத்துவர். சந்திரயானால் நமக்கு என்ன நன்மை?விமானங்களை கூட வெளிநாட்டில் இருந்து வாங்கும் நாம், சந்திரயானை நமது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கி நிலவிற்கு அனுப்பி உள்ளோம். அதனால், பல நாடுகளில் இருந்து செயற்கைக்கோள் செய்து தரும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஒரு செயற்கைக்கோள் செய்து கொடுத்துள்ளோம். மற்றொன்று உருவாக்கும் பணி நடந்து வருகிறது. ‘இஸ்ரோ’வில் உள்ள 13 ஆயிரம் இன்ஜினியர்கள் அதற்கு போதாது. சந்திரயான் வெற்றியால், செயற்கைக்கோள் வர்த்தக வாய்ப்புகளும், விண்வெளித்துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகமாகி உள்ளன. நிலவில் அதிகமாக உள்ள ஹீலியம்-3  மூலம் உலகம் முழுவதும் உள்ள எரிபொருள் தேவையை நிறைவேற்ற முடியும். சந்திரயானால், சர்வதேச அரங்கில், மினியேச்சர் தொழில்நுட்பத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக, நிலவின் அனைத்து பகுதிகள் அடங்கிய, ‘3-டி’  தொழில்நுட்பத்தில், ‘அட்லஸ்’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதையெல்லாம் விட, உலக அரங்கில், ‘இந்தியர்’ என்று நாம் பெருமையாக சொல்லி கொள்ளும் நிலை. இவ்வாறு அண்ணாதுரை பதிலளித்தார். அதையடுத்து, ‘அறிவு விரிவு பெற பெரிதும் தேவை படிப்பா-வாசிப்பா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. சுற்றுலாத்துறை செயலர் வெ.இறையன்பு நடுவராக இருந்தார். முனைவர் தேவிலட்சுமி, கவிஞர் மோகனசுந்தரம், முனைவர் சுந்தர ஆவுடையப்பன், கவிஞர். மணிகண்டன் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்