உள்ளூர் செய்திகள்

பொறியியல் முதுகலை: மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்

புதுச்சேரி: பொறியியல் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கைக்காக மைய குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் எம்.டெக்., எம்.எஸ்.சி., எம்.பில்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2014-15ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக மைய சேர்க்கைக் குழு(சென்டாக்-பி.ஜி.) அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மைய சேர்க்கைக் குழுவின் தலைவராக, கல்வித் துறை செயலர் செயல்படுவார். உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர், புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் கவுன்சில் டீன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.டெக்., எம்.எஸ்.சி. மற்றும் எம்.பில். ஆகிய படிப்புக்கான, ஒருங்கிணைப்பாளராக புதுச்சேரி பொறியியல் கல்லூரி, சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சிவசங்கரன், எம்.சி.ஏ. படிப்புக்கான ஒருங்கிணைப்பாளராக கம்ப்யூட்டர் பொறியியல் துறை இணை பேராசிரியர் ஜயராஸ், எம்.பி.ஏ. படிப்புக்கான ஒருங்கிணைப்பாளராக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் செல்வராஜூ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மைய சேர்க்கைக் குழுவின் கன்வீனராக, புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் செயல்படுவார். மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து, முறைப்படுத்தும் பணியை கன்வீனர் மேற்கொள்வார். சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங் மற்றும் சேர்க்கைக்கான பொறுப்பாளர்களாக ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுவர். எம்.டெக்., எம்.எஸ்.சி., எம்.பில்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கல்வித் தகுதி, சேர்க்கை நடைமுறைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விபரங்கள், www.pec.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்