உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் அலைகழிப்பு

திருப்பூர்: அங்கன்வாடி காலி பணியிடம் மற்றும் இன சுழற்சி ஒதுக்கீடு விவரம் போன்றவற்றை தெளிவாக அறிவிக்காததால், அப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல், பெண்கள் அலைகழிக்கப்படுகின்றனர். திருப்பூர் மாவட்ட அளவில், 13 ஒன்றியங்கள் மற்றும் திருப்பூர் நகரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 30ல் மாவட்ட நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மாவட்டத்தில் 14 வட்டார திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 அங்கன்வாடி பணியாளர்கள், 16 குறு அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் 196 மைய உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 31ம் தேதி முதல், வரும் 14ம் தேதி வரை, அந்தந்த திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும்; ஒவ்வொரு இடத்துக்கேற்ப, இனசுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அதில் கூறப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட ஊராட்சி அல்லது வார்டு பகுதியில் வசிப்பவர் மட்டுமே, இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும். ஆனால், வட்டாரம், ஊராட்சி அல்லது வார்டுகளில் உள்ள காலியிட விவரமோ, இனசுழற்சி விவரமோ, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடவில்லை. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகத்திலும், இவ்விவரங்கள் இடம் பெறவில்லை. மாறாக, அந்தந்த திட்ட அலுவலகங்களுக்கு சென்று, விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு அறிமுகமே இல்லாத திட்ட அலுவலகங்களில் விவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த அலுவலகங்களின் முகவரி குறித்தும் எந்த தகவல் இல்லை. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட திட்ட அலுவலகத்தை அணுகுகின்றனர். ஆனால், வட்டார திட்ட அலுவலகத்தின் முகவரியை கூறி, அங்கு சென்று விசாரித்து விண்ணப்பிக்குமாறு, திருப்பி அனுப்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்காததால், அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், பல்வேறு சிரமத்தை சந்திக்கின்றனர்; குறைந்த அவகாசமே உள்ள நிலையில், தேவையின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். பெண்களின் சிரமத்தை கருதி, காலிப்பணியிடம் மற்றும் இன சுழற்சி விவரத்துடன் தெளிவான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். மாவட்ட திட்ட அலுவலர் ஜோதி சுசீலாவிடம் கேட்டபோது, "இன சுழற்சி அடிப்படையில் பணியிடங்கள், நேர்காணல் மூலம் நிரப்பப்படும். அந்தந்த திட்ட அலுவலகங்களில், காலி பணியிட விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திட்ட அலுவலக முகவரியை தெரிந்துகொண்டு, நேரில் சென்று பார்க்கலாம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்