பேராசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு கல்லூரி மாணவர்கள் பாதிப்பு
முதுகுளத்தூர்: பேராசிரியர்கள் பற்றாக்குறையால், முதுகுளத்தூர் அரசு கல்லூரி தினமும் 2 மணி நேரம் மட்டுமே கல்லூரி செயல்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ல், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, கோவில் பட்டி, ஸ்ரீரங்கம் உட்பட 12 ஊர்களில் அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டது. அவற்றில், இதுவரை நிரந்தரமாக பேராசிரியர்கள் நியமிக்கபடாமல், மாற்று கல்லூரிகளிலிருந்தும், கவுரவ பேராசிரி யர்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இளங்கலை ஆங்கிலம், தமிழ், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் ஆகிய 5 துறைகளில், 267 மாணவர்கள் படித்து வரும் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில், மாற்றுபணி மூலமாக 5 பேரும், கவுரவ பேராசிரியர்கள் 6 பேரும் மட்டுமே வகுப்புகளை நடத்துகின்றனர். பேராசிரியர்கள் பற்றாக்குறையால், முதுகுளத்தூர், கடலாடி அரசு கல்லூரிகளில், மாணவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. வரும் காலங்களில், அரசு கல்லூரிகளை தவிர்த்து, தனியார் கல்லூரிகளை நாடும் கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறுகையில், "தனியார் கல்லூரி களில் கட்டணம் செலுத்தி படிக்க இயலாத, கிராமப்புற மாணவர்களாகிய எங்களுக்காக துவங்கப்பட்ட அரசு கல்லூரிகளில், போதிய பேராசிரியர்கள் இல்லை. மாற்று பணியில் பணியாற்றும் பேராசிரியர்களும், விடைத்தாள் திருத்தம், கருத்தரங்கம் உட்பட பல பணிகளுக்கு சென்று விடுவதால், மாணவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. 3 மாதங்கள் மட்டுமே மாற்று பணியில் பணியாற்றும் பேராசிரியர்களால், மாணவர்களின் பாடங்களை முழுமையாக நடத்த முடிவதில்லை. இதனால் மாணவர்கள், "செமஸ்டர் தேர்வுகளில், தேர்ச்சி பெறுவதே அரிதாக உள்ளது" என்றனர்.