உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த நிலையில், மாணவிகளுக்காக நிறுவப்பட்ட நாப்கின் இயந்திரங்கள்

கோவை: கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும், 80 சதவீத உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளில், மாணவிகளுக்காக நிறுவப்பட்ட நாப்கின் இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில், பயனற்று இருப்பதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2009ல், 21 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரமும், நாப்கின் எரியூட்டும் இன்சினரேட்டர் இயந்திரமும் நிறுவப்பட்டன. இதனால், மாணவிகள் சுகாதார முறைப்படி, நாப்கின் பயன்படுத்தி எரியூட்டினர். ஒரு ரூபாய் காயின் போட்டால், நாப்கின் வழங்கும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டது. கடந்த, 2013ல், பழுதடைந்த இயந்திரங்களை சீரமைத்ததுடன் மட்டுமல்லாமல், கூடுதலாக, 10 பள்ளிகளில் இயந்திரங்கள் நிறுவப்பட்டன. தற்போது, 31 மாநகராட்சி உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளில், இவ்வசதி உள்ளது. இருப்பினும், தற்போது, 80 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்காக நிறுவப்பட்ட நாப்கின் இயந்திரம், பயன்படாத நிலையில் உள்ளது. இதேபோல், இன்சினரேட்டர் இயந்திரமும் முறையான பராமரிப்பு இல்லாததால், பழுதடைந்து காணப்படுகிறது. பயன்படுத்திய நாப்கினை கழிப்பிடத்திலுள்ள குப்பை கூடைகளிலும், பிளஷ் அவுட்களிலும் வீசி எறிவதால், பொதுச்சுகாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இல்லாத அளவுக்கு, கழிவறை, தண்ணீர் வசதி மாநகராட்சி பள்ளியில் உள்ளது. மாணவியரின் சுகாதாரம் மேம்படுத்தும் நோக்கில், நாப்கின் இயந்திரம் மற்றும் இன்சினரேட்டர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஆனால், இவை தற்போது பயனற்ற நிலையில் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்