பள்ளி விளையாட்டுப் பொருட்கள் பழுதால் மாணவர்கள் பாதிப்பு
கொட்டையூர்: நரசமங்கலம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள விளையாட்டு பொருட்கள் பழுதடைந்துள்ளதால், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம், கொட்டையூர் ஊராட்சிக்குட்பட்டது நரசமங்கலம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர் கல்வி பயில்வதற்காக, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டு, அதில் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உபகரணங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், பழுதடைந்து வீணாகியுள்ளதால், மாணவர்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளியில் உள்ள பழுதான விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.