உள்ளூர் செய்திகள்

ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்

கோத்தகிரி: கோத்தகிரியில் இயங்கிவந்த ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை, டானிங்டன் பகுதியில், பாலர் சேவா நிலையம் என்ற ஆதரவற்றோர் மாணவர் இல்லம், கடந்த 51 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த இல்லத்தை சேவியர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இதில், காவலர், சமையல்காரர் உட்பட 5 பேர் பணிப்புரிந்து வருகின்றனர். இந்த இல்லத்தில் 6 வயது முதல், 18 வயதுவரை மொத்தம் 25 மாணவ, மாணவியர் தங்கி, கோத்தகிரியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதரவற்றோர் இல்லத்தில், போதிய அடிப்படை வசதி இல்லை; சரியான உணவு பரிமாறுவதில்லை என, கூறப்படுகிறது. இதுகுறித்து, பெற்றோர் கொடுத்த புகாரின்படி, கோத்தகிரி தாசில்தார் மிலானியஸ் மற்றும் ஆர்.ஐ., கலைச்செல்வி மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி ஆகியோர், குறிப்பிட்ட இல்லத்தை ஆய்வு செய்தனர். மாணவர்களிடம் தனித்தனியாக நடத்திய ஆய்வுக்குப்பின், அங்கு தங்கியிருந்த மாணவர்கள் 25 பேர், கோத்தகிரி சி.எம்.எஸ்., ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த, இல்லத்தை நிர்வகித்துவரும் சேவியர் கூறுகையில், "இந்த இல்லம், 51 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. மாணவர்களின் தேவைகள் அவ்வப்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சிறந்த சேவை செய்தமைக்காக, விருதுகள் கிடைத்துள்ளன. அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால், நன்கொடையாளர்களிடம் நிதிப்பெற்று இல்லத்தை நிர்வகித்து வருகிறேன். வேண்டாத சிலர், புகார் கொடுத்ததால், மாணவர்கள வேறு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும், சேவை தொடரும்" என்றார். இதுகுறித்து, தாசில்தார் மிலானியஸ் கூறுகையில், "ஆதரவற்றோர் இல்லத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை; தரமான உணவு வழங்கப்படவில்லை; அடிப்படை வசதி குறைவு. இதனால், பாதுகாப்பு கருதி, மாணவர்கள் வேறு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்