வண்ணத்துப் பூச்சிகளுக்கு சிறுபூங்கா; அமெரிக்கன் கல்லூரியில் ஆய்வு
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் 25 சென்ட் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சியில் முதுநிலை அறிவியல் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகர்கோவில் பகுதியில் 101 வகை வண்ணத்துப்பூச்சிகளை பார்க்க முடிகிறது. கல்லுாரியில் 40 வகை உள்ளன. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலுக்காகவும் பூங்கா அமைத்துள்ளோம் என்கின்றனர், கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், விலங்கியல் துறை உதவி பேராசிரியை ஜாய் சர்மிளா. அவர்கள் கூறியதாவது: மாணவர்கள் ரங்கேஷ், ஆல்வின் மேபஸ்ராஜ், பிரசாந்த், சசிகரன் ஆகியோர் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியலை ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றின் வாழ்க்கையில் இருந்து நிறைய கற்கலாம். ஒவ்வொரு வகை பூச்சிக்கும் ஒவ்வொரு தட்பவெப்பநிலை தேவை. இவற்றை கவரும் வகையில் லேன்டனா, இட்லிப்பூ, டிரைடாக்ஸ், தும்பைப்பூ, நந்தியாவட்டை, செம்பருத்தி செடிகளை பூங்காவில் வளர்க்கிறோம். கல்லுாரியில் 40 வகைகள் இருந்தாலும், பூங்காவில் மட்டும் ஒரே நேரத்தில் 20 வகைகளை பார்க்க முடிகிறது. கொத்துப் பூக்களே விருப்பம் பெரும்பாலும் அவை ஒற்றைப்பூவை விரும்புவதில்லை. தேன் உறிஞ்சுவதற்கு வசதியாகவும், ஒரே இடத்தில் கொத்துப் பூக்கள் இருப்பதையுமே கவனிக்கின்றன. தும்பைப்பூவில் நிறைய தேன்துளிகள் இருப்பதால் பூச்சிகளை அதிகம் கவர்கின்றன. இவை தேனை மட்டும் உண்ணுவதில்லை. மண்ணில் உள்ள சோடியம், பழச்சாறு துளிகள், அழுகிய நண்டு இவற்றையும் உறிஞ்சுகின்றன. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கு கொன்றை, கறிவேப்பிலை, வில்வம், நாரத்தை, எலுமிச்சை, விளாம், இலந்தை மற்றும் ஆலமரங்களை விரும்புகின்றன. இதுவரை 6 வகைகளை இனவிருத்தி செய்துள்ளோம். முட்டையிலிருந்து 25 முதல் 30 நாட்களில் உருமாற்றம் பெறுகிறது. வண்ணத்துப்பூச்சியாக ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை, வகைகளுக்கு ஏற்ப உயிர் வாழ்கின்றன. தற்போது ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளோம். இதை முழுமையான பூங்காவாக மாற்றும் போது, கண்காட்சியாக மாற்றுவோம், என்றனர்.