அரசு பள்ளி கலை பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லை!
காஞ்சிபுரம்: தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலைப் பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தாமல் ஊராட்சியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளி, 2001ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில், தற்போது, 350க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் துவங்கப்பட்ட கலைப்பிரிவில், வணிகவியல், பொருளியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களுக்கு, இதுவரை ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இதனால், அப்பிரிவில் சேரும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது இப்பிரிவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த ஒரு ஆசிரியரே, மூன்று பாடங்களையும் கற்பிப்பதால், இப்பிரிவில் சேர்ந்துள்ள, 49 மாணவ, மாணவியர், முறையான பயிற்சியின்றி தவித்து வருகின்றனர். இந்த மூன்று பாடங்களுக்கும், காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப, பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வித் துறைக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் தேவைக்காக, 2009 - 10ம் நிதியாண்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், இப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியை முறையாக பராமரிக்காததால், பள்ளியில் உள்ள கழிப்பறை தண்ணீரின்றி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால், திறந்தவெளியை கழிப்பிடமாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், 2010 - 11ம் கல்வி ஆண்டில், ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், 1.5 லட்சம் ரூபாயில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், இதுவரை அப் பணிகள் முழுமை அடையவில்லை. சுற்றுச்சுவர் இல்லாததால், அப்பகுதிவாசிகள் பள்ளி வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில், சமூக விரோதிகள், பள்ளி வளாகத்தை, குடி&'மையமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை மட்டு மின்றி, பள்ளியை முறையாக பராமரிக்காததால், பள்ளி நிர்வாகத்தின் மீது, மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்து உள்ளனர். தாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முயற்சியால் தான், இப்பள்ளியில் கலைப் பிரிவு துவக்கப்பட்டது. துவங்கியதில் இருந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியரைக் கொண்டு, பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப, கல்வித் துறையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பள்ளியில் பாதியில் முடங்கியுள்ள சுற்றுச்சுவர் கட்டும் பணி குறித்து, ஊராட்சி தலைவருக்கு தெரிவித்துள்ளோம். பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைப்பதும், பராமரிப்பதும், குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறுப்பு. அவர்கள் தான் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில், பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவது குறித்து விசாரணை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பழமையான மரங்கள் அகற்றம்:இந்த பள்ளியில், கழிப்பறை கட்டுவதற்கான பணிக்கு, கனரக வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. வாகனங்கள் பள்ளிக்குள் வர தடையாக இருந்த, பழமையான எட்டு மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், கனரக வாகனங்களை பயன்படுத்தாமலேயே, கழிப்பறை கட்டும் பணிகள் முடிந்துள்ளன. 1.பள்ளி மாணவர்களுக்காக, கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பராமரிப்பின்றி வீணாகியுள்ளது. 2.பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 3.சுற்றுச்சுவர் கட்டும் பணி, அறைகுறையாக நிறுத்தப்பட்டதால், பொதுவழியானது பள்ளி வளாகம். 4.புதர்மண்டிய, மைதானமும், அதிலுள்ள பயன்பாடற்ற கழிப்பறையும். 5.சமூக விரோதிகளின் கூடாரமான, பள்ளி வகுப்பறை.