உள்ளூர் செய்திகள்

அழியும் தொன்மை விளையாட்டுகள் பள்ளிகள் ஊக்குவிக்க முன்வருமா?

வீரம், புத்தி சாதுர்யத்தை அடிப்படையாகக்கொண்ட, தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகள், படிப்படியாக மறைந்து வருவது வேதனை யளிக்கிறது. உலகில் முதன்மையானவனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மனிதன், பொழுது போக்குக்காக, பலவிதமான விளையாட்டுகளை கண்டு பிடித்தான். ஆரம்ப காலத்தில், அது, விலங்குகளை வேட்டையாடவும், விரோதிகளை விரட்டவும், உதவியாக இருந்தது. பின், வீரம், உடல் வலிமை, சாதுரியம், வல்லமையை வளர்க்கும் விதமாக, விளையாட்டுகள் மாறின. விளையாட்டு, அந்தந்த பகுதியின் வாழ்க்கை சூழல்கள், சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்ப இருந்தன. அவ்வாறு, தமிழகத்தில், பல்வேறு விளையாட்டுகள் தோன்றி, பெருமையை இன்றளவும் நிலைநாட்டி வருகின்றன. தமிழரின் விளையாட்டு, பெரும்பாலும், வீரத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு, மல்யுத்தம், கபடி போன்றவை ஒரு சில உதாரணம். ஆண்களை போல், பெண்களும், கும்மி, கோலாட்டம், பல்லாங்குழி போன்றவற்றை விளையாடி மகிழ்ந்து வந்தனர். சங்க கால பாடல்கள் மூலம், 96 விளையாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. கிச்சுக்கிச்சு தாம்பாளம், கழங்காடல், ஏறுகோள், சடுகுடு, கிட்டிப்புல், தாயம், ஆடுபுலி ஆட்டம், கிளித்தட்டு, பூப்பறிக்க வருகிறோம், பச்சைக்குதிரை, பாண்டி, பல்லாங்குழி போன்றவை, அவற்றில் முதன்மையானவை. இவற்றில், சடுகுடு (கபடி) மட்டுமே, தேசிய விளையாட்டாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. நாகரீகம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால், தொன்மை விளையாட்டுகள், இன்று மறைந்து வருகிறது. பாரம்பரிய விளையாட்டுகளை அழியாமல் காக்க, பள்ளிகளில் அது குறித்த விழிப்புணர்வை, இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை, பள்ளிகள் தோறும் ஊக்குவித்தால், தொன்மையான விளையாட்டுகளை பாதுகாக்க முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்