உள்ளூர் செய்திகள்

இலினாய்ஸ் பல்கலை தலைவர் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அமெரிக்க இலினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலை தலைவராக பொறுப்பேற்றுள்ள, தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் உள்ள, 131 ஆண்டுகள் பழமையான, உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலையாக, இலினாய்ஸ் பல்கலை உள்ளது. இதன் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை, ராஜகோபால், 53, பெற்றுள்ளார். இது தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி, இந்திய துணை கண்டத்திற்கே பெருமை.இவர் திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பையும், கிண்டி பொறியியல் கல்லுாரியில் மேற்படிப்பையும் பயின்றார். ஆகஸ்ட் 16ல், இலினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலை தலைவராக பொறுப்பேற்க உள்ள ராஜகோபால் ஈச்சம்பாடி, தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில், அண்ணா பல்கலை மற்றும் சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இது, பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலின் வெளிப்பாட்டை காட்டுகிறது. தமிழர்களின் தொழில்நுட்ப அறிவில் உலகளாவிய உயரத்துக்கு சான்றாக விளங்கும் ராஜகோபாலுக்கு, தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்