ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்திய மாணவர் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் ஒருலட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டாக இந்திய மாணவர்கள் மீது இனவெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன் நகரில் படிக்கும் 23 வயது இந்திய மாணவர், ஓய்வு நேரத்தில் டாக்சி ஓட்டுகிறார். நேற்று அதிகாலை, தனது பெண் நண்பரின் வீட்டுக்கு சென்ற இந்த மாணவர், டாக்சியை வெளியே நிறுத்தி விட்டு பெண் நண்பரை உணவு எடுத்து வர சொன்னார்.இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு வந்த விஷமிகள், மாணவரின் மார்பில் கடுமையாக தாக்கினர். மாணவர் மார்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுவதை கண்ட பெண் நண்பர், போலீசுக்கு தகவல் சொன்னார். போலீசார், இந்த மாணவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.மாணவரின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி விட்டதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து போலீசார் வழக்கம் போல் விசாரணை நடத்தி வருகின்றனர்.