இலவச இரவு பாடசாலை விஜய் ரசிகர்கள் திறப்பு
சென்னை: தமிழகம் முழுதும் இலவச பயிலகங்களை, விஜய் மக்கள் இயக்கத்தினர், நேற்று திறந்தனர்.சென்னையை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், கடந்த 11, 12 ஆகிய தேதிகளில், நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம் முழுதும் 234 சட்டசபை தொகுதிகளிலும், தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில், இரவு பாடசாலைகளை, காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவங்குவது என முடிவெடுக்கப்பட்டது.அதன்படி சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர், பெரம்பூர் தொகுதி முத்தமிழ் நகர் உள்ளிட்ட இடங்களில், இரவு பாடசாலைகளை, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். அப்போது, மாணவ - மாணவியருக்கு புத்தகப் பை, நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இரவு பாடசாலையை தொடர்ந்து நடத்த ஆசிரியர்கள் நியமனம், அவர்களுக்கான சம்பளம், இடம் உள்ளிட்டவற்றுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.மக்களின் நன்மதிப்பை பெற்ற காமராஜர் பிறந்த நாளில், விஜய் ரசிகர் மன்றம் சார்பில், இரவு பாடசாலை துவங்குவது நல்லது தான், என, தி.மு.க., பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் வரவேற்றுள்ளார்.