காலாவதி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு: தலைமை செயலகம் முற்றுகை
புதுச்சேரி: காலாவதி பாடத்திட்டத்தை கொண்டு போட்டி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அமைச்சக ஊழியர்கள், நகல்களை கிழிந்து எறிந்தனர்.அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 6ம் தேதி துறை ரீதியிலான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 842 யூ.டி.சி., ஊழியர்கள் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வுப்பாடத்தில் பழைய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். நேற்று ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே பாடத்திட்ட நகலை கிழித்து, அரசு மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து தலைமை செயலக முதல் தளத்தில் உள்ள தலைமை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தலைமை செயலர் ராஜிவ் வர்மாவை சந்தித்து முறையிட்டனர்.இது குறித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், உதவியாளர் பணிக்கான பாடத்திட்டம் 1987ம் ஆண்டு புதுச்சேரி அரசால் வெளியிட்பட்ட அலுவலக நடைமுறை கையேட்டை உள்ளடக்கியதாக உள்ளது. இது, 36 ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்டது. கடந்த 36 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சட்டங்கள் மாறியுள்ளன. ஆனால் நிர்வாக சீர்த்திருத்த துறை காலாவதியான பாடத்திட்டத்தினை வைத்து போட்டி தேர்வு நடத்துவது ஏற்க முடியாது. இது தொடர்பாக வழக்கு அடுத்த மாதம் 8ம் தேதி நடக்க உள்ளது. அதில் இறுதி தீர்ப்பு வரவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 6ம் தேதி தேர்வை வைத்துள்ளனர். நிர்வாக காரணங்கள் என ஏற்கனவே ஒரு மாதம் தேர்வை தள்ளி வைத்தனர். தற்போது இறுதி தீர்ப்பு 8ம் தேதி வர உள்ளதால் அதுவரை தள்ளி வைத்து, தீர்ப்பின்படி செயல்படலாம் என கோரியுள்ளோம். முதல்வரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம் என்றார்.