மூலிகைச் செடிகளை பராமரித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் கழகம் சார்பில் வழங்கபட்ட மூலிகை செடிகளை பராமரித்து வளர்ந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.பள்ளியின் சுற்றுச்சூழல் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கோடை கால விடுமுறையில் மூலிகைச் செடிகள் மற்றும் வளர்ப்பதற்கான ஜாடிகள் வழங்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பின், அந்த செடிகளை வளர்த்து, பள்ளி சுற்றுச்சூழல் கழகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் செந்தமிழ் செல்வி வரவேற்றார். பொறுப்பாசிரியர் புகழரசன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் கழக பொறுப்பாசிரியர் பாலகுமார் மூலிகை செடிகளின் பயன்களை விளக்கி கூறினார்.இதில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேசவர்த்தினி, பால் பெருக்கி, இன்சுலின் செடி, யானை திப்பிலி, அமுக்குரா, ராவணன் மீசை, துளசி, சுண்டை, கற்றாழை, வேம்பு உள்ளிட்ட பலவகை மூலிகைச் செடிகளை பராமரித்து வளர்த்து, அதன் வளர்ச்சியை கணக்கிட்டு, சுற்றுச்சூழல் கழக பொறுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பானு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லட்சுமி, திருமாறன், சுமலதா, ராமமூர்த்தி, தமிழ்மாறன், அருள்மொழி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.