உள்ளூர் செய்திகள்

எது சிறந்த கல்வி? கல்லூரி நிகழ்ச்சியில் விளக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரியில், ‘புது வாழ்வு,’ என்ற தலைப்பில் நல்வாழ்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசுகையில், “மாணவர்கள் சிறந்த நம்பிக்கையுடன் தங்கள் பயணத்தை வடிவமைக்க வேண்டும். வருமுன் காப்போம் எனும் மந்திரத்தை மாணவர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். சைவ உணவு மிகவும் சிறந்தது. அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்,” என்றார். அமெரிக்காவைச் சேர்ந்த உடல் நல ஆலோசகர் மால்கியோபெரூஸ் பேசுகையில், “உடல், மனம், ஆன்மா எனும் மூன்றையும் ஒரு நிலைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சிறந்த கல்வியாகும். சத்துணவு, உடற்பயிற்சி, உடலுக்கு தேவையான நீர், சூரிய வெப்பம், சுத்தமான காற்று, ஓய்வு, கடவுள் நம்பிக்கை, இயல்பான மனோபாவம் ஆகிய எட்டு காரணங்களும் தூண்களாக இருந்து நமது உடல்நலன்களை காக்கிறது,” என்றார். கல்லூரி தாளாளர் துளசிஅய்யா வாண்டையார் பேசியதாவது: உடலுக்கு சக்தி, உள்ளத்தை கட்டுப்படுத்துதல், உணர்வு போன்றவைகள் நியாயமானதாக இருந்தால் மனதோடு அவை ஒத்துழைத்து நமது செயலுக்கு வெற்றியை தரும். நாம் எடுத்த காரியத்தை செயல்படுத்த சக்தி அவசியம். சைவ உணவே சிறந்தது. அசைவம் தான் பிரியம் என்றால் செரிக்கும் அளவுக்கு சாப்பிடுவதே மேன்மை. நல்வாழ்வுக்கு சுகாதாரமான சுற்றுச்சூழல், நல்ல நீர், காற்றோட்டம் போன்றவை அவசியம். செல்வம் நிலையில்லாதது. அதனால்தான் செல்வத்தை, ‘செல்வோம்,’ என்கிறோம். சோம்பல் மனிதனை அழித்துவிடும். நீரழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை எளிமையான மூச்சுப்பயிற்சி மூலம் குணப்படுத்தலாம். மூச்சுப் பயிற்சி சக்தியை தரும். முடிந்தவர்கள் யோகாசனம் செய்யலாம். வளர்ந்த நாடு ஒன்றில், ‘யோகக்கலை மதம் சம்மந்தப்பட்டது. அதை நாம் பின்பற்றக்கூடாது,’ என்றார் ஒருவர். யோகக்கலை பொதுவானது. பெயரை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், அதன் பயன் மற்றவர்களுக்கு கிடைப்பதை மதத்தின் பெயரால் மறுக்காதீர்கள். நல்ல பயிற்சி நல்லுணர்வை நமக்கு பழக்கமாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்