சிறந்த கிராம கல்விக்குழுவுக்கு பரிசு: எஸ்.எஸ்.ஏ., முடிவு
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தும் கிராம கல்விக்குழுக்களை தேர்வு செய்து பரிசளித்து ஊக்குவிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம்(எஸ்.எஸ்.ஏ) முடிவு செய்துள்ளது. இது பற்றி எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள உத்தரவு:அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டங்களை செயல்படுத்துவதில் கிராமக் கல்விக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இக்கிராமக் கல்விக் குழுக்களை ஊக்குவிக்கும் விதமாக, சிறந்த குழுக்களை தேர்வு செய்து பரிசளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சிறந்த கிராமக் கல்விக்குழு தேர்வு செய்யப்படவுள்ளது. இதற்காக வட்டார வள மைய அளவில் ஒரு குழு அமைக்கப்படும். வட்டார வளமைய மேற்பார்வையாளர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஒரு ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய நான்கு அலுவலர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினர், சிறந்த கிராமக் கல்விக்குழுவை தேர்வு செய்வர். அளவீடுகள்: கல்வி சார்ந்த இதர பள்ளி பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். கிராமக் கல்விக்குழுக் கூட்டங்களை மாதம் இருமுறை நடத்தி முறையாக தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். பள்ளிக் கட்டடங்களை நன்கு பராமரித்திருக்க வேண்டும். செயல்வழிக் கற்றல் முறை, படைப்பாற்றல் கல்வி முறைகளை சிறப்பாக செயல்படுத்தியிருக்க வேண்டும். சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி வயது மாணவர்களையும் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டும். சுதந்திர தினவிழா, கிராமக் கல்விக்குழு விழா, ஆண்டு விழாக்களை சிறப்பாக நடத்தியிருக்க வேண்டும். பள்ளி வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியர் மற்றும் கிராமக் கல்விக்குழுத் தலைவர் ஆகியோர் சிறந்த பங்களிப்பு அளித்திருக்க வேண்டும், ஆங்கிலத் திறனை வளர்க்க வெளியிடப்பட்ட சி.டி.,க்கள், கம்ப்யூட்டர்களை தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். பொதுமக்களிடம் பள்ளிக்கான நிதி மற்றும் பொருட்களை அதிகளவில் பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு மதில் சுவர் அமைத்திருக்க வேண்டும். பூங்காவை பராமரித்திருக்க வேண்டும். கிராமக் கல்விக்குழுவுக்கான ரொக்கப் புத்தகம், பேரேடு, பற்றுச் சீட்டுகள், இருப்புப் பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரித்திருக்க வேண்டும். இந்த அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஜன. 30க்குள் அதிக மதிப்பெண் பெறும் கிராமக் கல்விக்குழு தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் குழு, மாவட்ட கலெக்டர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேடயம் வழங்கி கவுரவிக்கப்படுவர். இவ்வாறு, வெங்கடேசன் கூறியுள்ளார். இந்த உத்தரவின்படி, சிறந்த கிராமக் கல்விக்குழுவை தேர்வு செய்யும் பணியில் அனைவருக்கும் கல்வி இயக்க தேர்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.