கனவு பெரிதாக இருக்க வேண்டும்: கவர்னர் ரவி
மதுரை: மாணவர்கள் பெரிதாக கனவு காண வேண்டும்; அது உங்களை துாங்க விடாத கனவாக இருத்தல் வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களிடையே கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கி பேசினார்.இப்பல்கலை 55வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், விழா முடிந்த பின் பதக்கம் பெற்ற பிஎச்.டி., முதுநிலை, இளநிலை மாணவர்களிடம் பிரத்யேக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது: ஐ.பி.எஸ்., பணி, கவர்னர் பதவி இதில் எதில் எளிது, ஆர்வம் உள்ளது என கேட்கின்றீர்கள். எந்த பணியை செய்தாலும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். விரும்பி செய்ய வேண்டும். அப்படித்தான் என் பணிகள் எதுவாக இருந்தாலும் விரும்பி செய்கிறேன். நேர்மையாக நடக்கிறேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடந்து சென்று தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். ஆர்வம் காரணமாக கல்வியை புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை. அனைவரும் அதை படிக்க வேண்டும்.மாணவர்கள் ஆழமாக படித்தால் தான் கற்ற கல்வி மனதில் நிற்கும். வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக இரவில் அதிகம் நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலை படிப்பு தான் சிறந்தது. நான் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாணவர்கள் தேவையின்றி அலைபேசியில் மூழ்கியிருக்காதீர்கள். உங்களுக்கு என ஒரு வாழ்க்கை, இலக்கு உள்ளது.அப்துல்கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் துாங்கவிடாமல் செய்யும் ஒரு கனவை காணுங்கள். அந்த கனவு பெரிதாக இருக்க வேண்டும். அது உங்களை துரத்த வேண்டும். அப்போது தான் அதை உங்களால் அடைய முடியும். பதக்கம் பெற்ற நீங்கள் சாதாரண மாணவர்கள் அல்ல. உங்களுக்காக இலக்குகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை அடைய மென்மேலும் உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர மேலாண்மை மிக அவசியம். திட்டமிட்டு படியுங்கள். வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.