பள்ளி அருகே படையப்பா யானை: மாணவர்கள் அச்சம்
மூணாறு: மூணாறு அருகே நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை சேதப்படுத்திய படையப்பா நேற்று பகல் முழுவதும் பள்ளி அருகே முகாமிட்டதால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட படையப்பா எனும் ஆண் காட்டு யானை நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வெஸ்ட் டிவிஷனில் வீட்டின் அருகில் நிறுத்தி இருந்த ஆட்டோவை சேதப்படுத்தியது. அதன் பிறகு அங்கிருந்து வெளியேறி படையப்பா நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு காலை 7:00 மணி வரை முகாமிட்ட யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டினர்.முகாம்இருப்பினும் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி பகல் முழுவதும் முகாமிட்டது. ஒரு கட்டத்தில் பல மணி நேரம் அயர்ந்து உறங்கியது. பள்ளி அருகே யானை முகாமிட்டதால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டபோதும் மாணவர்கள் அச்சமடைந்தனர். பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிய பிறகு மாலை 5.00 மணிக்கு பள்ளியின் நுழைவு வாசலுக்கு வந்தது.