பெயரளவில் நடக்கும் பள்ளி ஆய்வுகள்: கல்வியாளர்கள் புகார்
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வுகள் பெயரளவில் நடப்பதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நலத்திட்ட பொருட்களை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, அம்மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்துவது, செயல்திறன், சத்துணவு, கட்டமைப்பு உட்பட பள்ளியின் முழுமையான வளர்ச்சி குறித்து, நாள்தோறும் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.இதன் வாயிலாக, பள்ளிகளின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு திறன் போன்றவை அறியப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆய்வு நடத்தப்படும் போது, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் வினாக்கள் எழுப்பியும், செயிலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வு குறித்து, செயலியில் தொடர்ந்து பதிவேற்றப்படுகிறது.ஆனால், செயலிக்காக மட்டுமே ஆய்வுகள் நடக்கும் வகையில், தற்போது நிலை மாறி வருகிறது. பள்ளிகளின் தேவைகள், பிரச்னைகள் குறித்தும் கல்வித்துறை அலுவலர்கள் கவனம் செலுத்துவதில்லை என, பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியடைகின்றனர்.மேலும், கல்வித்துறையின் சார்பில் அனுப்பபடும் தகவல்கள் குறித்தும், முறையான அறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை.உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது:ஆய்வுகள் முறையாகவும், முழுமையாகவும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, பள்ளிகளின் வளர்ச்சியும் மேம்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு நாளில் இருபது வரை பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.ஆசிரியர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை, கல்வித்துறை அலுவலர்கள் வழங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கான தகவல் பரிமாற்றமும் தெளிவாக இருப்பதில்லை. கல்வித்துறை ஆய்வுகள் முறையாக நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு கூறினர்.தமிழக அரசும், கல்வித்துறையும், இவ்விஷயத்தில் கவனம் செலுத்துமாறு, மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.