பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்பார்ப்பு
உடுமலை: அரசுப்பள்ளிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா பொருத்த, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 38 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்; 118 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.ஆனால், பள்ளி பாதுகாப்பிற்கு, வாட்ச்மேன் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக உள்ளது. தவிர, பள்ளியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை கண்டறிந்து தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை.இதனால், பள்ளிகளில் தவறுகளை தடுப்பதற்கும், மாணவ, மாணவியர் பாதுகாப்பை கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை எழுந்துள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேநேரம், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மட்டுமே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில அரசுப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, தங்களது சொந்த செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். பிற அரசுப்பள்ளிகளிலும், நுாலகங்கள், ஆய்வுக்கூடங்கள், தலைமையாசிரியர் அறை மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப்பதற்கும், ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். இதற்கு, அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் துறை ரீதியான உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.