எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி இயக்கம் மீண்டும் துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., பெண்கள் கல்லூரி, ஓட்டு எண்ணிக்கை மையமாக செயல்பட்டது. கல்லூரியை தேர்தல் பிரிவினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருந்தவாறு கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. பாரதியார் பல்கலை தேர்வுகள் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதியில் பதிவான ஓட்டுகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டது. தற்போது கல்லூரி தேர்தல் பிரிவினரிடம் இருந்து கல்லூரி முதல்வர் வசம் ஒப்படைக்கப்பட்டது. பேலட் மிஷின் உள்ளிட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஸ்டராங்ரூமுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.தற்போது இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிக்கு உயர் படிப்புகள் குறித்த விபரம் கேட்க வரும் மாணவியருக்கு தகவல் மையம் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் கல்லூரியில் இருந்த படியே பணியை தொடர்கின்றனர். பல்கலை தேர்வுகள் முடிவுகள் இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்வு நடந்து வரும் மையத்தை மாற்றி குழப்ப வேண்டாம் என பல்கலை உத்தரவிட்டுள்ளதால், கல்லூரி செயல்பாடுகள் மாறினாலும், தேர்வு முடியும் வரை, தொடர்ந்து ஜெய்வாபாய் பள்ளியிலேயே மே மாதம் இறுதி வரை தேர்வுகள் நடைபெறும்.