கல்லுாரிகளில் சேராத மாணவருக்கு தீர்வு காண நிகழ்ச்சி
சேலம்: சேலம் மாவட்டத்தில், 2025 - 26ல், பிளஸ் 2 முடித்து, இது வரை கல்லுாரிகளில் சேராத மாணவர்களுக்கு, 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி, செயின்ட்பால் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் இளம் பகவத் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 படித்த, 35,334 பேரில், 32,166 பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். சேராத, 3,168 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தடையாக உள்ள காரணிகளை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறையுடன் ஆலோசித்து தீர்வு காண, வருவாய் கோட்ட வாரியாக, உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.சேலம் வருவாய் கோட்டத்தில், 50 அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேராத, 636 மாணவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி கடன் தேவைப்படுவோருக்கு வங்கிகள் மூலமும், பல்வேறு உதவித்தொகை குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.