பள்ளிக்கு புதிய கட்டடம் கோரி மாணவர்கள் மறியல்
நத்தம்: நத்தம் கொண்டையம்பட்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.நத்தம் பேரூராட்சி கொண்டையம்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்ததால் ஓராண்டு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடம் கட்டவில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாணவர்களுடன் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை ஸ்டாப் பகுதியில் நேற்று மறியல் நடந்தது. மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன், நகர பொறுப்பாளர்கள் ராஜ்குமார், ஹரி, நிதிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தாசில்தார் டேனியல்பிரேம்குமார், ஒன்றிய ஆணையாளர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர். நத்தம் மதுரை ரோட்டில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.