விமானப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் அசுதோஷ் தீட்ஷித்
புதுடில்லி: நம் விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக, ஏர் சீப் மார்ஷல் அசுதோஷ் தீட்ஷித், 60, பொறுப்பேற்றார். தலைமை தளபதியாக இருந்த ஏர் சீப் மார்ஷல் ஏ.பி., சிங் ஓய்வு பெற்றதை அடுத்து, இந்த பொறுப்புக்கு தீட்ஷித் நியமிக்கப்பட்டார்.இந்திய விமானப்படையில், 40 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர் அசுதோஷ் தீட்ஷித். விமானப்படையின் துணை தலைமை தளபதியாக இருந்த இவர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.இந்நிலையில், டில்லியில் உள்ள ரேஸ் கோர்ஸ் விமானப்படை நிலையத்தில், ஓய்வு பெற்ற விமானப் படை தலைமை தளபதி ஏ.பி., சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர் தன் பொறுப்புகளை அசுதோஷ் தீட்ஷித்திடம் ஒப்படைத்தார்.இதையடுத்து விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக அசுதோஷ் தீட்ஷித் பொறுப்பேற்றார். இவர், தேசிய பாதுகாப்பு அகாடமி, வங்கதேச ராணுவ பணியாளர் கல்லுாரி மற்றும் தேசிய ராணுவ கல்லுாரி ஆகியவற்றில் பயின்றவர்.கடந்த 1986ல் இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மிராஜ் - 2000, மிக் ரக விமானங்கள், கிரண், ஜாகுவார், ஐ.எல்., - 78, ஹாக் மற்றும் தேஜஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையான விமானங்களை இயக்கிய அனுபவம் இவருக்கு உள்ளது. 3,500 மணி நேரத்திற்கும் மேல் விமானங்களை இயக்கியுள்ளார்.